"சார்"... என்று அசிஸ்டெண்ட் அழைக்க, சினிமா இதழ் ஒன்றை வாசித்து கொண்டிருந்த நான் திரும்பினேன்.
"என்னய்யா?"
"சான்ஸ் கேட்டு ஒரு லேடி வந்திருக்காங்க..."
"இப்ப யாரையும் பார்க்க முடியாதுன்னு சொன்னியா? தினமும் ஐம்பது பேர் நடிக்க சான்ஸ் கேட்டு வர்றாங்க. யாருக்கு சான்ஸ் கொடுக்கிறது. கொஞ்சம் கலரா இருந்தா போதும், சென்னைக்கு ரயிலேறி வந்துடறாங்க" என்று அலுத்து கொண்டேன்.வாய்ப்பு தேடி நான் அலைந்த காலங்களையெல்லாம் இப்போது மறந்து - ஜெயித்துவிட்ட அகங்காரத்தில் பேசுவதாயத் தோன்றியது.
"பிஸியா இருக்காங்கன்னு சொன்னேன் சார்... உங்களை நல்லா தெரியும்னு சொன்னாங்க. பேரு கலாவாம். நாலைந்து வருஷத்துக்கு முன்ன உங்களுக்கு பழக்கமாம்" என்றான்.
எந்த கலா... ஓ! அவளா? ஞாபகம் வந்துவிட்டது.
சான்ஸ் கேட்டு வந்திருப்பது கலாவா? சிரிப்பு வந்தது. இனி என் முறை... ஜெயித்துவிட்டதாக கருதி அன்று என்னை மதியாமல் பேசினவள், என் காதலை துச்சமாய் மதித்தவள் - இன்று என்னிடமே சான்ஸ் கேட்டு வந்திருக்கிறாள்.
நல்லதும் கெட்டதுமாகப் பல விஷயங்களை வாழ்க்கை காட்டுகிறது. பரிதாபம் என்னவெனில் நல்ல விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டு, கெட்ட விஷயங்களை மட்டுமே ஞாபகத்தில் கொண்டு வாழ்கிறோம். தானும் கூட அதற்கு விதிவிலக்கல்ல... துவேஷம், ஆணவம், அகங்காரம் இவற்றை மட்டுமே மனத்தில் கொண்டு - என்னை சிறுமைப்படுத்தியவர்களையெல்லாம் சிறுமைப்படுத்த ஆவலாய் பறக்கிறேன். வயது வித்தியாசம் கூட பார்ப்பதில்லை. மனதில் நிறைந்திருப்பது பழி உணர்ச்சி மாத்திரமே.
நான் குடி இருந்த போர்ஷனுக்கு பக்கத்து வீட்டில் தான் கலா குடி இருந்தாள். சினிமா ஆசையில் மதுரையிலிருந்து சென்னைக்கு ஓடி வந்தவன் நான். கலாவும் சினிமா ஆசையில் தன் தாயுடன் சென்னை வந்து விட்டவள் தான். கலா நாயகிக்குரிய வசீகரமான தோற்றத்துடன் இருந்தாள். நல்ல இயக்குனரின் கண்ணில் பட்டால் நிச்சயம் பெரிய அளவில் பிரகாசிப்பாள் என்று தோன்றியது.
அப்போது எங்கள் காம்பவுண்ட்டில் இருந்த இளைஞர்களில் - நான் தான் உருப்படியாய் ஒரு பிரபல இயக்குனரிடம் வேலையில் இருந்தேன். மற்றவர்கள் எல்லாம் ஏனோ தானோ இயக்குனர்களிடம் பணிபுரிந்தனர். ஆயினும் எல்லோரிடமும் ஒரே ஒரு ஒற்றுமை இருந்தது. அது கலாவின் மீதான காதல். எனக்கு இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்தால் அவளது சினிமா ஆசையை தணித்து, அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினேன்.
கலாவும் மற்றவர்களை விட என் மீது அதிகமான ப்ரியத்துடன் பழகினாள். காதல் என்று நம்பினேன்.
"அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை. சான்ஸ் வாங்கத்தான் இந்த தந்திரம். ஏமாந்துடாதே" என்று நண்பர்கள் சொன்னார்கள். ஒரு தருணத்தில் கலாவை விரும்புவதாய் சொன்னேன். கலாவுக்கும் விருப்பம் தான்.
"உங்களுக்கு எதுக்கு சினிமா ஆசை. விட்டுடுங்க. நாம கல்யாணம் பண்ணிப்போம். கொஞ்ச நாள்ல எனக்கு தனியா படம் பண்ணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் சரி - இப்பவே பண்டிக்கிட்டாலும் சரி தான். நான் மூணு பேருக்கு கௌரவமா சோறு போடக்கூடிய அளவு சம்பாதிக்கிறேன்" என்றேன்.
தலையைத்தாள். அது சம்மதமா? சம்மதமின்மையா என்று புரியவில்லை. அந்த சமயம் அவள் நாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. ஓரளவு பெயர் சொல்லும்படியான இயக்குனர் தான். அவள் நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் எது சொல்லவும் எனக்கு எந்த உரிமையுமில்லையே. கதாநாயகியான மறு நிமிஷமே என்னை மறந்து போனாள். என்னோடு பேசுவதை நிறுத்தி கொண்டாள். அவமானமாய் இருந்தது. அவளுக்கு நான் என்ன கெடுதல் செய்தேன். அவளோடு கௌரவமாய் தானே பழகினேன். அவளது புறக்கணிப்பு என்னை இம்சித்தது."நான் ஜெயிக்கப் போகிறேன். இனி உன் தயவு தேவை இல்லை" என்கிறாளோ.
பிரபலமாகிவிட்டால் - இவனை வெட்டிவிடுவது கஷ்டம் என்று இப்போதே வெட்டி விட்டு விட்டாளோ? ஒரு கதாநாயகி, உதவி இயக்குனரை நேசிப்பது கௌரவக்குறைச்சல், தன் அந்தஸ்துக்கு சரி படாது என்று கருதினாளோ. அவளது உதாசினம் என்னை பொடி பொடியாய் நொறுங்கி போக செய்தது.
"உனக்கு வெற்றியை தரும் வாழ்க்கை - நாளை எனக்கும் தரும் என்று ஏன் பெண்ணே உனக்கு புரியவில்லை. வெற்றி என்பது உனக்கு மட்டும் சொந்தமான ஒன்று இல்லையே" புலம்பினேன்.
கதாநாயகியான சில நாட்களிலேயே இந்த போர்ஷனை விட்டு போய் விட்டாள். முதல் படம் வந்தது. சுமாராக போனது. தொடர்ந்து இரண்டு படங்கள். சொல்லி கொள்ளும்படியாக இல்லை. பிறகு இரண்டாவது கதாநாயகியாய் நடித்தாள். பிறகு காணவே இல்லை. அவளை நானும் மறந்து விட்டேன். இடைப்பட்ட காலத்தில் என் வளர்ச்சி துவங்கியது. ஆறு படங்கள் இயக்கி நான்கை வெற்றி படங்களாக்கி இருந்தேன்.
வெற்றிப்பட இயக்குனர் என்று பெயர் எடுத்துவிட்டேன். கலா என்பவளை நான் மறந்து விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். முதல் படம் பண்ணும்போது அவள் ஞாபகம் எனக்கு இருந்தது. எங்கு அவள் இருக்கிறாளோ... எங்கு இருந்தாலும் - நான் ஜெயிப்பதை பார்க்கக்கூடும் என்று நினைத்தேன்.
எத்தனையோ பேரால் - எத்தனையோ இடங்களில் அவமானப்பட்டிருக்கிறேன். அதெல்லாம் என்னை பாதிக்கவில்லை. ஆனால் ஒரு பெண்ணால் - அவமானப்படுத்தப்பட்டது தான் வெகு காலத்திற்கு என்னை அலைக்கழித்தது. காலப்போக்கில் அவளை மறந்துவிட்டேன்.
இப்போது என்னிடமே வாய்ப்பு கேட்டு வந்திருப்பது தான் காலத்தின் கோலம். உனக்கு வாய்ப்பா தருவேன்... அலைக்கழிப்பேன். யாரையும் எப்போதும் துச்சமாய் மதியாதே. அவர்கள் எந்த வடிவிலாவது வளர்ந்து நம் முன்பே ஆஜானுபாகுவாய் நிற்பார்கள் என்ற உண்மையை ஏன் மறந்தாய்? மனசுக்குள் ஆத்திரம் பொங்கியது.
"எந்த மூஞசியை வைத்து கொண்டு என்னிடமே சான்ஸ் கேட்டு வந்திருக்கிறாய்" என்று கறுவிக் கொண்டே எழுந்தேன்.
அறையை விட்டு வெளியே வந்தேன். "எங்க இருக்கு அந்த பொண்ணு" கேட்டேன்.
"வராண்டால இருக்காங்க"
இருக்கட்டும். இருக்கட்டும். அன்று எனக்கு ஏற்பட்ட வலியை இன்று நான் உனக்கு எந்த வடிவிலாவது தரப்போகிறேன் பார்.." மனத்தில் வக்ரத்தை நிரப்பி வழியவிட்டு கொண்டு வராண்டாவுக்கு வந்தேன்.
அதிர்ந்து போனேன். அவள் தோற்றத்தை பார்த்து. என் கலாவா இது?
அந்த வனப்பு குறைந்து போய், மெலிந்து கன்னம் ஒட்டி பஞ்சத்தில் அடிபட்டவள் போல் இருந்தாள். என்னை பார்த்ததும் எழுந்து நின்றாள். சிரித்தாள் பழைய சினேகத்தில். பொடி பொடியாய் உதிர்ந்து போனேன். இவளுக்கு என்ன வாய்ப்பு தர முடியும்?
சட்டென்று தோன்றியது. சம வலிமை உள்ளவனோடு போரிட்டால் தான் வெற்றிக்கும் மரியாதை. போரிடுபவனுக்கும் பெருமை. பார்க்கவே பரிதாபமாக இருக்கிறாளே. இவளோடு போராட - எனக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.அனுதாபத்துடன் அவளை பார்த்தேன். மனத்தின் வக்ரம் காணாமல் போய்விட்டது. கலாவுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று யோசிக்க துவங்கினேன்.
கல்கியில் "2002"ம் ஆண்டு வெளிவந்த எனது சிறுகதை.

22 கருத்துரைகள்:
கதை அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள், அந்த பொண்ணுக்கு ஏதாவது நல்லது செய்யுங்க மக்கா, நம்பி வந்துவிட்டாளே...!!
மனித இயல்பைப் படம் பிடித்துக் காட்டும் அருமையான கதை. கல்கி வெளியீட்டுக்கு வாழ்த்துகள்!
அருமை.
தனக்கு அடிமையாய் இருப்பதையே விரும்பும் மனம்!
நல்ல அருமையான கதை. கல்கி, ஆனந்தவிகடன் போன்ற பல இதழ்களில் தங்கள் எழுத்து மின்னி இருப்பது பாராட்டுக்குரியது.
புத்தகங்கள் அத்தனை வாசிக்கும் பழக்கம் இல்லை என்பதால் இவையெல்லாம் புதிதாகவே வாசிக்கும் அனுபவம் எனக்கு. நன்றி ஐயா.
கதை நல்லா இருக்கு! கல்கி இதழ்ல, இந்த கதைக்கு பொருத்தமா படமும் ரொம்ப அழகா இருக்கு. சந்தோஷம்!
//சம வலிமை உள்ளவனோடு போரிட்டால் தான் வெற்றிக்கும் மரியாதை. // மிகவும் சரி!
அருமையான கதை
அருமையான முடிவு
வாழ்த்துக்கள்
த.ம 4
பழி வாங்கும் மனிதனுக்குள்ளும் மனிதம் இருக்கத்தானே செய்கிறது.இயல்புநடைதான் உங்கள் கதைகளை உச்சத்தில் வைக்கிறது.தமிழுக்குப் பாராட்டுக்கள் !
இந்த வக்கிரம் எல்லாருக்கும் இருப்பதே..அவமானங்களை புறக்கணப்பதை மறக்கவே முடியாது அதே நேரம்
//சம வலிமை உள்ளவனோடு போரிட்டால் தான் வெற்றிக்கும் மரியாதை. போரிடுபவனுக்கும் பெருமை. //
இந்த எண்ணம் மிகச் சரியானதே ஆனால் அவரை மாதிரி பேசாமல் விட்டுடுவோமான்னு தான் சந்தேகம்..கதை நீதி சொன்னதில் நிமிர்ந்து நிற்கிறது..தமிழ் எதை எழுதினாலும் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லும்படி தானே இருக்கும்,,இதுவும் அப்படியே தமிழ்..
//நல்ல விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டு, கெட்ட விஷயங்களை மட்டுமே ஞாபகத்தில் கொண்டு வாழ்கிறோம்//
உண்மை. அருமை. உணர்வுகள்தான் உங்கள் கதைகளின் நாயக நாயகியர்.
இது போல நடிகை காரில் ஏறி காதல டைரக்டரைப் பார்க்காமல் போகும் கதை ஒன்றையும் எழுதி இருக்கிறீர்களோ...படித்த ஞாபகமாய் இருக்கிறது.
ஸ்ரீராம். said...
//இது போல நடிகை காரில் ஏறி காதல டைரக்டரைப் பார்க்காமல் போகும் கதை ஒன்றையும் எழுதி இருக்கிறீர்களோ...படித்த ஞாபகமாய் இருக்கிறது.//
எனக்கும் இந்த கதையை படித்தபோது இதேதான் நினைவுக்கு வந்தது.
MANO நாஞ்சில் மனோ said...
கதை அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள், அந்த பொண்ணுக்கு ஏதாவது நல்லது செய்யுங்க மக்கா, நம்பி வந்துவிட்டாளே...!!////
அது தானே மனிதாபிமானம் மனோ.
ராமலக்ஷ்மி said...
மனித இயல்பைப் படம் பிடித்துக் காட்டும் அருமையான கதை. கல்கி வெளியீட்டுக்கு வாழ்த்துகள்!!!////
நன்றி ராமலக்ஷ்மி கருத்துரைக்கு.
Rathnavel said...
அருமை.!////
மகிழ்ச்சி ரத்னவேல் சார் உங்கள் வருகைக்கு.
V.Radhakrishnan said...
தனக்கு அடிமையாய் இருப்பதையே விரும்பும் மனம்!
நல்ல அருமையான கதை. கல்கி, ஆனந்தவிகடன் போன்ற பல இதழ்களில் தங்கள் எழுத்து மின்னி இருப்பது பாராட்டுக்குரியது.
புத்தகங்கள் அத்தனை வாசிக்கும் பழக்கம் இல்லை என்பதால் இவையெல்லாம் புதிதாகவே வாசிக்கும் அனுபவம் எனக்கு.!////
உங்களுக்காகவே மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன் ஐயா
மீனாக்ஷி said...
கதை நல்லா இருக்கு! கல்கி இதழ்ல, இந்த கதைக்கு பொருத்தமா படமும் ரொம்ப அழகா இருக்கு. சந்தோஷம்!/இது போல நடிகை காரில் ஏறி காதல டைரக்டரைப் பார்க்காமல் போகும் கதை ஒன்றையும் எழுதி இருக்கிறீர்களோ...படித்த ஞாபகமாய் இருக்கிறது.//எனக்கும் இந்த கதையை படித்தபோது இதேதான் நினைவுக்கு வந்தது.
//////
ஆமாம் மீனாட்சி. எழுதி இருந்தேன். சினிமா மற்றும் ஓரளவு இதே கருவை கொண்டு பத்து சிறுகதைகள் வரை கொஞ்சம் மாற்றி மாற்றி எழுதி உள்ளேன். பிரசுரமான கதைகள் தான்.
Ramani said...
அருமையான கதை
அருமையான முடிவு
வாழ்த்துக்கள்
த.ம 4//////
நன்றி ரமணி சார் வாக்குக்கும், கருத்துக்கும.
ஹேமா said...
பழி வாங்கும் மனிதனுக்குள்ளும் மனிதம் இருக்கத்தானே செய்கிறது.இயல்புநடைதான் உங்கள் கதைகளை உச்சத்தில் வைக்கிறது.தமிழுக்குப் பாராட்டுக்கள் /////
ஹேமா, உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.
.
தமிழரசி said...
இந்த எண்ணம் மிகச் சரியானதே ஆனால் அவரை மாதிரி பேசாமல் விட்டுடுவோமான்னு தான் சந்தேகம்..கதை நீதி சொன்னதில் நிமிர்ந்து நிற்கிறது..தமிழ் எதை எழுதினாலும் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லும்படி தானே இருக்கும்,,இதுவும் அப்படியே தமிழ்../////
தமிழரசி. உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி.
ஸ்ரீராம். said...
//நல்ல விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டு, கெட்ட விஷயங்களை மட்டுமே ஞாபகத்தில் கொண்டு வாழ்கிறோம்//
உண்மை. அருமை. உணர்வுகள்தான் உங்கள் கதைகளின் நாயக நாயகியர்.
இது போல நடிகை காரில் ஏறி காதல டைரக்டரைப் பார்க்காமல் போகும் கதை ஒன்றையும் எழுதி இருக்கிறீர்களோ...படித்த ஞாபகமாய் இருக்கிறது.../////
ஆமாம் ஸ்ரீராம். எழுதி இருந்தேன். சினிமா மற்றும் ஓரளவு இதே கருவை கொண்டு பத்து சிறுகதைகள் வரை கொஞ்சம் மாற்றி மாற்றி எழுதி உள்ளேன். பிரசுரமான கதைகள் தான். நன்றி ஸ்ரீராம்,
வித்தியாசமான கோணம். எது போட்டி எது வெற்றி என்ற அறிவும் முதிர்ச்சியின் அடையாளம் தானோ?
அப்பாதுரை said...
வித்தியாசமான கோணம். எது போட்டி எது வெற்றி என்ற அறிவும் முதிர்ச்சியின் அடையாளம் தானோ?/////
இருக்கலாம் அப்பாதுரை சார்.
வாழ்ந்து காட்டுவதைப்போல் பழி வாங்கும் செயல் வேறெதுவுமில்லை என்ற வரிகளை இந்த சிறுகதை நினைவூட்டுகிறது. அருமை.
Post a Comment